மும்பை: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.2 கோடி வெளிநாட்டு சிகரெட்களை மும்பையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.24 கோடி என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தரக்கட்டுப்பாட்டு விதிப்படி இந்த வெளிநாட்டு சிகரெட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இந்த சிகரெட்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சரக்குகளை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தக் குறிப்பிட்ட கண்ெடய்னர் நவி மும்பையில் உள்ள நவா சேவா துறைமுகத்திலிருந்து கிளம்பியது.
தனியார் கிடங்கு: அந்தக் கண்டெய்னர் அர்ஷியாஇலவச வர்த்தக கிடங்கு மண்டலத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால், அந்தக் கண்டெய்னர் அங்கு செல்லாமல், தனியார் கிடங்குக்குச் சென்றது. அப்போது வழிமறித்து சோதனையிட்டோம். அதில் 1.2 கோடி வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தன.
சுங்க ஆவணத்தில் அந்தக் கண்டெய்னரில் வேறு பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்க ஆவணப்படி அவர்கள் இந்தக் கண்டெய்னரை அர்ஷியா இலவச வர்த்தக கிடங்கு மண்டலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்நிலையில் அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்புவதற்காக, கண்டெய்னரை தனியார் கிடங்குக்கு திருப்பி உள்ளனர். இந்தச் சிகரெட்களை அந்தக் கிடங்கில் இறக்கி வைத்து விட்டு, சுங்க ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருள்களை அந்தக் கிடங்கில் இருந்து கண்டெய்னரில் ஏற்றி அர்ஷியா மண்டலத்துக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களை வழிமறித்து பிடித்தோம். அவர்கள் கடத்திச் சென்ற வெளிநாட்டு சிகரெட்களின் மதிப்பு ரூ.24 கோடி ஆகும். இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.