கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளி, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கோகுல் மற்றும் ராகுல். காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காளம்பாளையம் டாஸ்மாக் பாரில் செல்வராஜ் மது வாங்கும் போது சகோதரர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் செல்வராஜ் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இதையடுத்து செல்வராஜை பின்தொடர்ந்து சென்ற ராகுல் மற்றும் கோகுல் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைய அருகில் இருந்தவர்கள் செல்வராஜை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்வராஜ் சிகிச்சை பலனன்றி உயிரிழந்துவிட்டார்.
தகவலறிந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சகோதரர்கள் இருவரும் செல்வராஜை தாக்கி இழுத்து சென்றது தெரியவந்தது. இதில் கோகுல் திமுக தென்கரை கிளை இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பேரூர் போலீஸ் சகோதரர்கள் கோகுல் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.