கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த மே 10ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில்
காங்கிரஸ்
135, பாஜக 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 19, மற்றவை 4 என வெற்றி பெற்றன. இதன்மூலம் 1989ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிக இடங்களில் வென்று காங்கிரஸ் புதிய வரலாறு படைத்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே ஒரு மாநிலம் கைவிட்டு போனது. இதன்மூலம் திராவிட மண்ணில் மதவாத சக்திகளின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டிருப்பதாக பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சி தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி செல்லும் சித்தராமையா
அதுமட்டுமின்றி ஒவ்வொரு எம்.எல்.ஏவிடமும் யாருக்கு ஆதரவு என எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் கடிதம் ஒன்றை கட்சியின் மேலிடத் தலைவர்கள் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டெல்லி புறப்பட்டு செல்ல சித்தராமையா திட்டமிட்டிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து முதலமைச்சர் தேர்வு தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைக்கலாம் எனத் தெரிகிறது.
டிகே சிவக்குமார் முடிவு
அதேசமயம் டெல்லி செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கட்சி மேலிடத்தில் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. முதலமைச்சர் யார் என்பது பற்றி மேலிடம் தான் முடிவு செய்யும். எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து முடித்துள்ளேன். இதுதவிர தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
முதலமைச்சர் நாற்காலி
உரிய நேரத்தில் ஆட்சி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் இருதரப்பின் ஆதரவாளர்களும் கட் அவுட் வைப்பது, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்குவது என முதலமைச்சர் நாற்காலி தங்களுக்கு தான் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரிக்கும் போது, சித்தராமையா, டிகே சிவக்குமார் என இரண்டு தலைவர்களுமே செல்வாக்கு பெற்றவர்கள்.
வரும் 18ஆம் தேதி பதவியேற்பு
கட்சிக்காக தீவிரமாக வேலை செய்தவர்கள். எனவே இருவருக்கும் சம வாய்ப்பு உள்ளது. எனினும் யாராவது ஒருவர் மட்டும் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலமைச்சராக இருந்தால் நன்றாக இருக்கும். அனைத்துமே கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு தான். கர்நாடகாவில் வரும் 18ஆம் தேதி புதிய முதலமைச்சர் பதவியேற்பார். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.