மோடி இமேஜ் காலி… ஊழல் பேச்சு, காத்தோட போச்சு… தன் வாயால் கெட்ட பாஜக- மாறும் தேசிய அரசியல்!

கர்நாடக தேர்தல் முடிவுகள் மற்றும் பாஜக வீழ்ந்த கதையை பற்றி பிரபல அரசியல் செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான சுதீந்திர குல்கர்னி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அலுவலக செயல்பாட்டு இயக்குநராக இருந்தவர். இவர் தன்னுடைய பதிவில், மிகப்பெரிய ஊழல் சர்ச்சையால் வீழ்ந்த அரசுகளை பார்த்திருப்போம். ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஊழலில் திளைத்து புரையோடி கவிழ்ந்தது கர்நாடகாவில் தான். உதாரணமாக பிரதமர் மோடிக்கு கர்நாடகா மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் எழுதிய கடிதத்தை சொல்லலாம். இங்குள்ள அமைச்சர்கள் அரசின் அனைத்து திட்டங்களிலும் 40 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர்.

40 சதவீத கமிஷன்

அதில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும் விதிவிலக்கல்ல. கமிஷன் கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக தனது வெற்றிக்காக நம்பியிருக்கும் ஒற்றை பிம்பம் பிரதமர் மோடி. அவரை வலிமையான தலைவராக தொடர்ந்து முன்னிறுத்தி வருகின்றனர். அவரது பிரதான கொள்கையே ஊழல் எதிர்ப்பு என்பது தான். மன்மோகன் சிங் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவற்றை பூதாகரமாக்கி, தாங்கள் நேர்மையான ஆட்சியை தருவோம் என மக்கள் மன்றத்தில் வாக்குறுதி அளித்தனர்.

பாஜகவின் ஊழல் எதிர்ப்பு

இப்படி ஊழல் எதிர்ப்பை பிரதான பேசி வந்த பாஜக, அதே ஊழலால் தான் கர்நாடகாவில் ஆட்சியை இழந்து நிற்கிறது. இந்த 40 சதவீத கமிஷன் விஷயத்தை பல விதங்களில் பிரச்சாரம் செய்ய
காங்கிரஸ்
முடிவு செய்தது. அதை செய்தும் காட்டியது. இதுதவிர விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் கோபமாக வெடித்தது. இந்த இடத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் என்ற பிரச்சாரம் எடுபடவில்லை. மக்கள் கேட்கும் கேள்வி இதுதான். மத்தியிலும் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் பாஜக ஆட்சி.

கர்நாடகா மக்கள் கொதிப்பு

ஆனால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு மட்டும் வழி செய்ய மாட்டீர்கள். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்தினீர்களா? 9 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை ஏறி போய்விட்டது என மக்கள் கடுப்பில் இருக்கின்றனர். மேலும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெற்றி பெற்ற கதை எங்காவது இருக்கிறதா? கர்நாடகாவில் செல்வாக்கு பெற்றிருந்த சமூகத் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் ஓரங்கட்டினர். அதன்பிறகு நரேந்திர மோடி என்ற ஒற்றை பிம்பத்தை பிடித்து கொண்டு வெற்றியை தேடி அலைந்தனர்.

பிரிவினைவாத அரசியல்

ஒட்டுமொத்த கட்சியும் இவ்வாறு மோடி மந்திரத்தையே கையிலெடுத்தது. அதுமட்டுமின்றி இந்து – இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு பல விஷயங்களை செய்தது. இந்துத்துவா அஸ்திரத்தை கையில் எடுத்து மேல்தட்டு மக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என கனவு கோட்டை கட்டியது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், ஓட்டு போடும் போது ”ஜெய் பஜ்ரங் பலி” என்று கூறி ஓட்டு போடுங்கள் எனக் கூறினார். இது பக்கா பிரிவினைவாதம். இதை காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான பஜ்ரங் தல் தடைக்கு எதிரான வியூகமாக பார்த்தது.

பிரதமர் மோடி இமேஜ்

ஆனால் அது தங்களையே திருப்பி அடிக்கும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒட்டுமொத்தமாக விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல், வெறுப்புணர்வு அரசியல், பிரதமர் மோடி பிம்பத்தை பெரிதாக நம்பியிருந்தது ஆகிய 5 விஷயங்கள் தான் பாஜக தோல்விக்கு காரணமாக தெரிகிறது. தற்போதைக்கு தேசிய அளவில் மோடிக்கு நிகரான நபர்கள் யாருமே இல்லை. ஆனால் மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையில் மாற்றம் வந்திருக்கிறது. இனியும் மோடி மந்திரம் எடுபடும் என்ற பகல் கனவில் இருந்து பாஜகவினர் விடுபட வேண்டும் என்று சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.