மரக்காணம் சம்பவம்: டாஸ்மாக் பாட்டிலில் கள்ளச்சாராயம் எப்படி? களமிறங்கும் சிபிசிஐடி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டனர். உடனே அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆவடி நாசருக்கு ஆப்பு வைத்த ஸ்டாலின்

எக்கியார்குப்பம் கள்ளச்சாராய சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள், மெத்தனால் எரி சாராயத்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

டாஸ்மாக் பாட்டிலில் சாராயம்

மேலும் ஏழு நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் டாஸ்மாக் நிறுவன பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை

பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை முதல்வர்

இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,

கேள்வி: எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள்?

ஒன்பது பேர் இங்கு இறந்திருக்கிறார்கள், செங்கல்பட்டில் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். செங்கல்பட்டில் மேலும் ஏழு பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். மேலும் நாற்பது பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: உரிய சிகிச்சை அளிக்கப்படாது, உயிரிழப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள், வெறும் குளுக்கோஸ் மட்டும்தான் ஏற்றியிருக்கிறார்கள்?

அவர்கள் பதட்டத்தில் சொல்கிறார்களே தவிர உரிய சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு டிரிப்ஸ் ஏற்ற வேண்டும், அதற்குப் பிறகுதான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும், இதில் முறைகள் இருக்கிறது. அதனால், மருத்துவ ரீதியாக செய்து கொண்டிருக்கிறார்கள், நன்றாக விசாரித்து விட்டேன். நீங்கள் சொன்னதுபோல ஒருவர், இரண்டு பேர் நீங்கள் சொன்னதுபோல புகார் செய்தார்கள், அது உண்மையல்ல.

கேள்வி: எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்?

கடுமையான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.