வாகனங்களில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் மாட்டுவது, ஹெல்மெட் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் விபத்துகளின் போது ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க இவை பெரிதும் உதவுகின்றன. அனுபவத்தில் உணராதவரை பலரும் இவற்றை அலட்சியமாகவே நினைகின்றனர். டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி தனது விலை உயர்ந்த காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார். சீட் பெல்ட் அணியாதது அவரது உயிர் இழப்புபுக்கு காரணமாக அமைந்தது.
இந்தியாவை பொறுத்தவரை, கார்களில் முன்புற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. சீட் பெல்ட் அணியா விட்டால் அலாரம் ஒலிக்கும் வசதி கார்களில் உள்ளது.
ஆனால் பெரும்பாலும் யாரும் சீட் பெல்ட் அணிவதில்லை.. அப்போது தானாக ஒலிக்கும் அலாரத்தை நிறுத்திவைத்து விட்டு பயணத்தை தொடர்கின்றனர். இப்படி அலாரம் ஒலிப்பதை நிறுத்தி வைக்கும் ‘சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்’ சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நுகர்வோர் விவகாரத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில், “தவறான விற்பனையாளர்கள் / ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவையான ஆலோசனையை வழங்கவும் அந்த கடிதத்தில் வலுயுறுத்தி இருந்தது.
மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குகிறது. சீட் பெல்ட் அணியாதபோது அலாரம் பீப்பை நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்கின்றனர். இதுபோன்ற ‘சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்’ கருவிகளை விற்பனை செய்வது நுகர்வோரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக முடியும்..
மேலும் ‘சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்’ பயன்படுத்துவது, மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் தொகையை பெறமுடியாமல் போகலாம். மறுபுறம், சீட் பெல்ட் பாதுகாப்பு உயிரைக்காக்கும் கவசமாகவும் செயல்படுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதை தொடர்ந்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் பல ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்கப்படுவதைக் கண்டறிந்தது. இதையடுத்து அந்த சாதனங்களை விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்வதற்கான முதல் 5 ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறும் வகையில் அமைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமேசான், பிளிப்கார்ட், மீஸோ, ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் உரிமைகள் மீறல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனால் இந்த 5 இ-காமர்ஸ் நிறுவனங்கள் அவற்றின் தளங்களில் இருந்து 13,118 கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை நீக்கியுள்ளன. அதிகபட்சமாக அமேசான் தளத்திலிருந்து 8,095, பிளிப்கார்ட்டிலிருந்து 5,000 சீட் பெல்ட் அலாரம் நிறுத்த சாதனங்கள் விற்பனைப் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும் பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
“நுகர்வோரின் உயிர் மதிப்புமிக்கது, இதுபோன்ற தவறான தயாரிப்புகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அது குறித்த தகவலை தெரியப்படுத்த வேண்டும்” என்று தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் விவகாரத்துறை வலியுறுத்தியுள்ளது.