தென்னிந்தியாவில் வலுவான அடித்தளம் அமைக்க, பல ஆண்டுகளாகப் போராடி வரும் பா.ஜ.க, கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியை தன்வசம் வைத்திருந்ததால், கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென அதிதீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, 5 மாநில முதலமைச்சர்கள் என பலரும் தேர்தல் பிரசாரம் செய்தனர். 1,377 ரோடு ஷோக்கள், 3,116 பிரசாரக் கூட்டங்கள், 9,125 மக்கள் கூட்டங்களை நடத்தியது பா.ஜ.க.
‘காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது; ஊழல் நிறைந்தது; பாதுகாப்பான இந்தியாவை பா.ஜ.க மட்டுமே கொடுக்க முடியும்’ என்பது போன்ற கோஷங்களை முன்வைத்து பிரசாரம் செய்தது.
பெரும்பான்மையுடன் வெற்றி
மறுபக்கம், பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து வலுவிழந்த காங்கிரஸ், வருகின்ற, 2024 லோக் சபா தேர்தலில் வலுவான எதிரணியை உருவாக்க, கர்நாடகாவில் வெற்றி பெற்று அடித்தளத்தை உருவாக்க வேண்டுமென்ற முனைப்பில், தீவிர பிரசாரம் செய்தது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எப்படியும் வென்றாக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு, பிரசாரம் செய்தது. ‘பா.ஜ.க 40 சதவிதம் கமிஷன் பெறும் ஊழல் கட்சி, கர்நாடகத்தில் பா.ஜ.க இந்துத்துவத்தை கட்டவிழ்க்கிறது’ என்பது போன்ற, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது.
கடந்த மே 10-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், துவக்கம் முதலே முன்னிலை வகித்த காங்கிரஸ் இறுதியில், 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜ.க வெறும் 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. குறிப்பாக, பா.ஜ.க-வின் ஆளுமைகளான 13 அமைச்சர்கள் உட்பட பலர் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.
‘மோடி அலை’யை வீழ்த்தி, பா.ஜ.க-வின் அனைத்து தேர்தல் வியூகங்களையும் தகர்த்து காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையில் வென்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
முதல்வர் பதவி யாருக்கு?
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்காக காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்குள்ள இருவரும், கடந்த இரண்டாண்டுகளாகவே முதல்வர் பதவி வழங்க வலியுறுத்தி மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுலிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதிலும், ‘யார் அடுத்த கர்நாடகா முதல்வர்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரா அல்லது, குறும்பா சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவா… யாருக்கு காங்கிரஸ் முதல்வர் பதவியைக் கொடுக்கப்போகிறது என்பதே விடையறியா கேள்வியாக உள்ளது.
‘ஆளுக்கு 2.5 ஆண்டுகள்!’
இது குறித்து, காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘முதல்வர் பதவியை வழங்கக் கோரி, 15-ம் தேதி சித்தராமையா தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் மேலிட உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார்.
இதேபோல், டி.கே.சிவக்குமாரும், ராகுல், சோனியா உட்பட அனைத்து மேலிட உறுப்பினர்களிடமும் முதல்வர் பதவி தனக்கு வழங்கக் கோரி கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்குத்தான் முதல்வர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளது. அதேசமயம், டி.கே.சிவக்குமார் அதிருப்தியடையாத வகையில் மேலிடம் வேரொரு ‘பிளான்’ வைத்துள்ளது. சித்தராமையாவை முதல்வராக்கி, டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஒருவேளை இதற்கு டி.கே.சிவக்குமார் ஒத்துவரவில்லை என்றால், முதல், 2.5 ஆண்டுகள் சித்தராமையாவுக்கும், அடுத்த, 2.5 ஆண்டுக்கால ஆட்சி டி.கே.சிவக்குமாருக்கும் வழங்க திட்டமிட்டுள்ளனர். இருவரும் சுமுகமாகச் செல்லும் வகையில் மேலிடம் திட்டமிடும்’’ என்கின்றனர்.
கர்நாடகா அரசியலில், பா.ஜ.க Vs காங்கிரஸ் என்ற நிலைமாறி, சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார் என்ற புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. இருவரின் ‘கோல்டு வார்’ எப்படியான தாக்கங்களை உருவாக்குமென, பொறுத்திருந்து பார்ப்போம்!