இது இல்லாமல் வெளிய வராதீங்க… அச்சுறுத்தும் வெயில்… எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்க திடீரென காலநிலை மாறி மழை பெய்ய தொடங்கியது. இதனால் சுற்றுப்புற சூழல் சற்று குளுகுளுவென இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறிய காலநிலையால் வெயில் வழக்கத்தை விட பொளந்து வருகிறது.

இன்று மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை பதிவு செய்துள்ளது. இனி அடுத்தடுத்த நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையமும் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (15.05.2023) 12.30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 2 0 – 3 0 C வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாகவும், உயர்ந்தபட்சமாக வேலூரில் 41.5 0 C பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, கரூர், பரமத்தி பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 2 0 – 3 0 C அதிகரித்து 40 0 C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் இயல்பு வெப்பநிலையில் இருந்து 2 0 – 3 0 C கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோடைகால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை

1. உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

2. அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்லுங்கள்.

3. ஓ.ஆர்.எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும்.

4. இந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும்.

6. மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும்.

7. வெளியில் செல்லும் போது காலணிகளை அணிவதுடன் குடையினையும் கொண்டு செல்லவும்.

8. உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

செய்யக் கூடாதவை

1. வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

2. சிறிய குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்.

என இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.