கொச்சி, கேரளாவில் கொச்சி கடற்பரப்பில் கப்பலில் இருந்து சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறை வாயிலாக இந்திய கடற்படைக்கும், என்.சி.பி., எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும் சமீபத்தில் தகவல் கிடைத்தது.
‘மெத்தாம்பெட்டமைன்’
இதன் அடிப்படையில், சமுத்திர குப்தா என்ற பெயரில் இக்குழுவினர் இந்திய கடற்பரப்பு முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 13ம் தேதி, கேரளாவில் கொச்சி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த கப்பலை, இந்திய கடற்படையினர் சினிமா பாணியில் விரட்டிச் சென்று சுற்றி வளைத்தனர்.
அக்கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதில், ‘மெத்தாம்பெட்டமைன்’ என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு, 12 ஆயிரம் கோடி ரூபாய் என முதலில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கப்பலில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பை, 23 மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றின் விபரத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில், 134 சாக்கு பைகளில் மொத்தம் 2,525 கிலோ எடையுள்ள போதைப்பொருள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை டி.ஜி., சஞ்சய் குமார் சிங் கூறியதாவது:
இந்திய கடற்படையுடன் இணைந்து வெற்றிகரமாக இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளோம். பிடிபட்ட கப்பல், மேற்காசிய நாடான ஈரானின் சபாஹர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
சப்ளை
இதில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து, இந்தியா, இலங்கை, மாலத்தீவு என பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, கப்பலில் போதைப்பொருட்களை கடத்தி வந்து, கடற்பரப்பின் ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு, சிறிய படகுகள் வாயிலாக அவற்றை வினியோகித்தது தெரியவந்துஉள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்