கள்ளச்சாராய மரணம்.. 'போலீஸ்தான் காரணம்'.. பழியை திருப்பிவிடும் கே.எஸ். அழகிரி..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்கள் 44 பேர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதன் எதிரொலியாக தமிழகத்தில் கள்ளச்சாராய சோதனைகளில் களமிறங்கியுள்ள போலீசார் அதிரடி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழப்புகள் நடந்து பிறகுதான் காவல்துறை நடவடிக்கை வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், விழுப்புரத்தில் கள்ளச்சாராய விற்பனை வெகு நாட்களாக நடந்து வருவதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் திமுகவினர் இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் புகார்கள் எழுகிறது. மேலும், கள்ளச்சாராய விற்பனையை

பெண் கவுன்சிலரின் கணவர் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றும் திமுகவினரின் தலையீட்டால் எதுவும் செய்யாமல் இருந்த கவால்துறைக்கு இப்போது பெரிய அளவில் களங்கம் ஏற்பட்டுள்ளது. அரசோ காவல் துறை மீது நடவடிக்கையை ஏவி வருகிறது. இதற்கும், அரசுக்கும் எந்த சம்மந்தமே இல்லாததை போல காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் பேசுவது வியப்பாக உள்ளது.

இந்த நிலையில், கள்ளச்சாராய மரணங்களுக்கு காவல்துறையே காரணம் என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயத்தை குடித்ததால் 11 பேர் இறந்த கொடுமையான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுகிறது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததினால் இத்தகைய கோர சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. விஷச் சாராய விநியோகம் நீண்டகாலமாக நடைபெற்று வருவதை காவல் துறை தடுக்க தவறியதால் இத்தகைய கோரமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மதுவிலக்கு அமல் பிரிவு என்று தனியாக செயல்பட்டாலும், இத்தகைய உயிரிழப்புகளை தடுக்காதது மிகுந்த வேதனையைத் தருகிறது. எந்தப் பகுதியிலாவது கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது என்றுச் சொன்னால், அந்தப் பகுதியிலுள்ள காவல் துறையினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்களது அலட்சியப் போக்கு காரணமாகவே விஷச் சாராயம் விற்கப்படுவதும், அப்பாவி ஏழை, எளிய மக்கள் அதை அருந்தி இத்தகைய கோர சம்பவத்திற்கு பலியாவதும் நிகழ்கிறது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

விஷ சாராயத்தை அருந்தி உயிரிழந்த 11 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் வழங்கியிருக்கிறார். மேலும், விஷச் சாராயத்தை அருந்தி விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகளோடு இணைந்து அவசர ஆய்வுக் கூட்டமும் நடத்தியிருக்கிறார். இச்சம்பவம் நிகழ்ந்த உடனே விரைந்து சென்று கள ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைகள் மிகுந்த வரவேற்புக்குரியது.

இத்தகைய கள்ளச் சாராய விற்பனையால் ஏற்படும் இறப்புகள் நிகழாமல் இருக்க காவல் துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பேற்கிற வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.