காரிலிருந்து நீண்ட கை… தாலியை காக்க போராடிய பெண்..! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் , வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் வந்த கொள்ளையர்கள் தாலி சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் உள்ள தங்க தாலி சங்கிலிகளை,  இரு சக்கர வாகனங்களில் வந்து கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நிலையில்,  தற்போது காரில் வந்து கைவரிசை காட்ட தொடங்கி இருக்கின்றனர்.

கோவை பீளமேடு ஹாட்கோ காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார், இவரது மனைவி கவுசல்யா, கணவன் மனைவி இருவரும் வழக்கமாக பீளமேடு ஹாட்கோ காலனி வீட்டில் இருந்து ஜி வி ரெசிடென்சி வரை நடை பயிற்சி செல்வது வழக்கம் . திங்கட்கிழமை காலை தனது கணவர் வராத நிலையில் கவுசல்யா மட்டும் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். இவரை வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் கொள்ளையர்கள் பின் தொடர்ந்தனர். ஜிவி ரெசிடென்சி வேலன் காப்பி ஹவுஸ் அருகே கவுசல்யா நடந்து சென்ற போது காரில் வந்த கொள்ளையர்களில் ஒருவன் வெளியே கையை நீட்டி கவுசல்யாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பிடித்து இழுத்தான்.

சுதாரித்துக் கொண்ட கவுசல்யா கூச்சலிட்டுக் கொண்டே அவனது கையை சேர்த்து பிடித்துக் கொண்டதால் , தவறி விழுந்து அந்த காருடன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அந்த கொள்ளையன் தங்க சங்கிலியை விட்டதும், கவுசல்யா சாலையில் விழுந்தார். கார் அங்கிருந்து வேகமாக கிளப்பிச்சென்று விட்டது.

கொள்ளையன் காரோடு இழுத்துச்செல்லப்படும் போது அதிர்ஷ்டவசமாக கவுசல்யாவின் தலை பின் சக்கரத்தில் சிக்காமல் தப்பியது, இல்லையென்றால் அவரது உயிருக்கே பெரிய அபாயத்தை உருவாகி இருக்கும் என்கின்றனர் இந்த சம்பவத்தை பார்த்தவர்கள். 

வாக்கிங் செல்லும் பெண்கள் கழுத்தை ஒட்டிய டி சர்ட்டுகளை அணிந்து சென்றால் கொள்ளையர்களால் எளிதில் தங்க சங்கிலியை எட்டிப்பிடிக்க இயலாது என்று போலீசார் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதுவரை இரு சக்கர வானத்தில் மட்டுமே சுற்றிய கொள்ளையர்கள் , காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் தற்போது நம்பர் இல்லாத கார்களில் வலம் வருவதால் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி கொள்ளையர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.