சென்னை: கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த இடத்திற்கான புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில், சங்கர், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழ்நதனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததில் 12 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகருக்கு கூடுதலாக செங்கல்பட்டு எஸ்.பி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் சரக டிஐஜியாக ஜியா உல் ஹக் நியமனம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி எஸ்.பி மோகன் ராஜ்-க்கு கூடுதலாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.