புதுடெல்லி: பொதுமக்கள் தங்களது மொபைல் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ எளிதாக கண்டுபிடிக்க ஏதுவாக புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு நாளை அறிமுகம் செய்யவுள்ளது.
மத்திய டெலிமேடிக்ஸ் துறைக்கான (டிஓடி)) மையம் உருவாக்கியசி இஐஆர் என்ற மத்திய உபகரண அடையாள பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் தொலைந்து போன அல்லது திருடுபோன மொபைல் போன்களின் 15 இலக்க தனித்துவ அடையாள ‘‘ஐஎம்இஐ’’ எண்ணைக் கொண்டு அவற்றின் இருப்பிடத்தை எளிதாக கண்டறிய முடியும். மேலும், அந்த மொபைலை பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.
இந்த புதிய தொழில்நுட்ப நடைமுறை ஏற்கெனவே டெல்லி, மும்பை உள்ளிட்ட குறிப்பிட்டசில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
சஞ்சார் சாத்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புதிய தொழில்நுட்ப போர்ட்டலை உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாளை (மே 17) அறிமுகப்படுத்தவுள்ளார்.
இதன் மூலம், திருடு போன மொபைல் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் அதன் இருப்பிடத்தை எளிதில் கண்டறியலாம். அதுமட்டுமின்றி அதன் சேவைகளை முடக்கவும் செய்யலாம்.
தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட 4,70,000 மொபைல் போன்களை முடக்கவும், 2,40,000 பேரின் மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம் ஏற்கெனவே உதவியுள்ளது.
இதன் மூலம் திருடப்பட்ட மொபைல்போன் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்பதுடன், காவல் துறையினர் அதனை எளிதாக கண்டறியவும் முடியும். மேலும், போலியான மொபைல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் மத்திய அரசின் இந்த புதிய தொழில்நுட்பம் உதவும்.