புதுடெல்லி: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி தள்ளுபடி செய்தது. அத்துடன் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, மனுதாரர்கள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர். இதனால், திட்டமிட்டபடி இந்தப்படம் கடந்த 5-ம் தேதி வெளியானது.
இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தி கேரளாஸ்டோரி படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தனர். இதையடுத்து, “இந்தப் படத்தில் எந்த ஒரு மதத்துக்கு எதிரான கருத்தும் இல்லை. இதுபோல திரைப்பட தணிக்கை வாரியமும் இந்தப் படத்தை ஆய்வு செய்து திரையிட அனுமதி வழங்கி உள்ளது. எனவே இந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் குர்பான் அலி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவை நேற்றே விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது.
எனினும், ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட சில வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.