2022-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை நடந்து முடிந்த 10 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒரேயொரு மாநிலத்தில் (ஹிமாச்சலப் பிரதேசம்) மட்டுமே வெற்றிபெற்றது. இதன் காரணமாக அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணியை உருவாக்க சில கட்சிகள் முயன்றன. இத்தகைய சூழலில் தான் தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
காங்கிரஸின் இந்த வெற்றி, 2024-ல் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட வழிவகுத்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு 2024-ல் தனித்துக் களமிறங்குவதாக அறிவித்த மம்தா பானர்ஜி, அதானி விவகாரம், ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னர் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறிவந்தார். இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெற்றதையடுத்து தற்போது காங்கிரஸ் பக்கம் நகர்ந்திருக்கிறார் மம்தா.
மாநில செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 2024 வியூகம் குறித்து பேசிய மம்தா, “கர்நாடகாவின் தீர்ப்பு பா.ஜ.க-வுக்கு எதிரான தீர்ப்பு. மக்கள் அவர்களை எதிர்க்கிறார்கள். பிராந்தியக் கட்சிகள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பா.ஜ.க-வால் எதிர்த்துப் போராட முடியாது. நாள்தோறும் அட்டூழியங்கள் அரங்கேறுகின்றன. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஜனநாயக உரிமைகள் புல்டோசர் கொண்டு தாக்கப்படுகின்றன. மல்யுத்த வீரர்களையும் கூட அது விட்டுவைக்கவில்லை.
இத்தகைய சூழலில், தங்களின் பிராந்தியத்தில் பலமாக இருக்கும் ஒருவர், அங்கு பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் ஒன்றாக நின்று போராடவேண்டும். மேற்கு வங்கம் என்றால் திரிணாமுல் காங்கிரஸ் முன்னின்று போராட வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி போராட வேண்டும். பீகாரில், நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறார்கள். அது அவர்களின் முடிவு. அவர்களின் வியூகத்தை நான் முடிவுசெய்ய முடியாது.
அதேபோல் தமிழ்நாட்டில் தி.மு.க-வும், காங்கிரஸும் நட்பாக இருக்கிறது. அவர்கள் ஒன்றாக எதிர்த்துப் போராடலாம். ஜார்கண்டிலும் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஒன்றாக இருக்கிறது. எனவே பிராந்திய கட்சிகள் எங்கெல்லாம் பலமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் பிராந்திய கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைக் காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். கர்நாடகாவில் நான் உங்களுக்கு (காங்கிரஸ்) ஆதரவளிக்கிறேன். ஆனால், மேற்கு வங்கத்தில் நீங்கள் என்னை எதிர்க்கிறீர்கள். இது உங்கள் கொள்கையாக இருக்கக் கூடாது. இது அனைவருக்குமே தான்.
மேலும் உங்களுக்குச் (காங்கிரஸ்) சாதகமாக எதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், சில பகுதிகளில் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அகிலேஷ் யாதவ் முன்னுரிமை பெறவேண்டும். அதெற்கென்று காங்கிரஸ் அங்கு எதிர்த்துப் போராடக்கூடாது என்று கூறவில்லை. இதுவொன்றும் இறுதிக் கட்டமல்ல. இது குறித்து விரிவாக விவாதித்து முடிவெடுக்கலாம்” என்றார்.