லைகா நிறுவனம் குறிவைக்கப்பட்டது ஏன்? சுற்றி வளைத்த அமலாக்கத்துறை… சென்னையில் பரபரப்பு!

லைகா தயாரிப்பு நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. இது கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘கத்தி’ படத்தை தயாரித்திருந்தது. இதுவே லைகா நிறுவனத்தின் முதல் படமாகும். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு திரைப்படங்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ளன.

லைகா நிறுவனத் தயாரிப்புகள்

கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ’பொன்னியின் செல்வன் – 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளில் வெளியான இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியதாக லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை

அடுத்தகட்டமாக அருண் விஜய் நடிப்பில் மிஷன் சேப்டர் 1, கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, விஷ்ணு விஷால் நடிப்பில் லால் சலாம், அஜித் நடிப்பில் விடா முயற்சி ஆகிய படங்களை தயாரிக்க உள்ளது. இந்நிலையில் கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

அமலாக்கத்துறை சோதனை

இதன்பேரில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (மே 16) காலை சென்னையில் உள்ள அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தியாகராய நகர் விஜயராகவ சாலையில் லைகா நிறுவனம் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் 8க்கும் மேற்பட்ட இடங்கள்

இங்கு காலை 7 மணி முதலே 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் சோதனை நடந்து வரும் இடங்களில் எந்தவித சலசலப்பும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஆவணங்கள் சோதனை

லைகா நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் நடந்து வரும் சோதனையில் இதுவரை அந்நிறுவனம் தயாரித்த படங்கள், அவற்றின் வருமானம், வரி செலுத்தியதற்கான ஆவணங்கள், பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆவணங்களில் ஏதேனும் முறைகேடுகள் தெரியவந்தால்,

அடுத்த அதிரடி

அதைக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் PMLA 2002 எனப்படும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் அமிரா பியூர் புட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு சொந்தமான 21க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பேசுபொருளாக மாறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.