லண்டன்: பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு நூற்றுக் கணக்கான வான் தடுப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே ஒராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை நேற்று முன்தினம் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தேவையான ராணுவ மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதி அளித்தது.
இந்நிலையில், நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றடைந்த ஜெலன்ஸ்கி, அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்யாவுக்கு எதிராக தரை மற்றும் வான் பரப்பில் ராணுவ பலத்தை விரிவுபடுத்துவதில் பிரிட்டன் முக்கிய பங்கு வகித்து வருகிறது” என பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க தேவையான ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் எனஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, நூற்றுக்கணக்கான வான் தடுப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் ஒப்புக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, “ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் உலகம் முழுவதும் பிரதிபலிக்கின்றன. எனவே, உக்ரைன் வெற்றிக்கு அனைத்து நாடுகளும் உதவவேண்டும்” என்றார்.