கோவை மாநகராட்சி 97வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் நிவேதா சேனாதிபதி (திமுக). வயது 23. கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலராக இருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் (7,786) வெற்றி பெற்றவர் இவர் தான் நிவேதா.
இவரது தந்தை மருதமலை சேனாதிபதி திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். அதனடிப்படையில் மேயர் பதவிக்கும் தீவிரமாக முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மேயர் பதவி கிடைக்கவில்லை.
மேயர் பதவி கிடைக்கவில்லை என்பதால் அப்செட் ஆனார். தேர்தல் முடிந்த சிறிது காலத்திலேயே நிவேதா சிவில் சர்வீஸ் படிக்க சென்றுவிட்டார் என தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக 97வது வார்டு திமுக செயலாளர் மகாலிங்கம் என்பவர் அறிவிக்கப்படாத கவுன்சிலராக வலம் வந்தார். வார்டு மற்றும் மாமன்றம் என இரண்டிலும் நிவேதா ஆப்சென்ட் ஆனார்.
இதன் காரணமாக மக்கள் தங்களது பிரச்னையை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை கலந்து கொள்ளாததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.
அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நடைபெற்ற மூன்று கூட்டங்களில் நிவேதா கலந்து கொள்ளவில்லை. மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் சட்டப்பிரிவு 32(4)இன் படி தகுதி நீக்கத்தை மாமன்ற கூட்டம் தான் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல 95வது வார்டு கவுன்சிலர் அப்துல் காதர் என்பவர் உடல்நிலை சரியில்லை என்பதால் 4 மாதங்கள் நடந்த கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரிய விளக்கம் அளித்தார். அதனை மாமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அவர் கவுன்சிலராக தொடரலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், “அப்துல் காதரிடம் விளக்கம் கேட்கப்பட்டது போல, நிவேதாவிடமும் விளக்கம் கேட்கப்படும். அவர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து நடக்கவுள்ள மாமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அவர் கவுன்சிலராக தொடரலாம். எதுவாக இருந்தாலும் அவர் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.