இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்றத்தின் புதிய தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற சிநேகபூர்வ சங்கத்தின் 9ஆவது பாராளுமன்றத்திற்கான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (10) இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல மற்றும் எஸ். எம். எம் முஷாரப் ஆகியோர் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் இஷாக் ரஹ்மான் மற்றும் விஜித ஹேரத் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உதவிச் செயலாளராகவும், பொருளாளராகவும் தெரிவானார்கள்.
இதன்போது இலங்கையின் நீர், எரிசக்தி, சுகாதாரம், வீதிகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் 15 பல்வேறு திட்டங்களுக்கு சுமார் 425 மில்லியன் டொலர்களை அபிவிருத்திக் கடனாக வழங்கியமைக்கு இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த புதிய தலைவர் அமைச்சர் நஸீர் அஹமத், இலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.