கேன்ஸ்: கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய பங்கு அளிக்கப்பட்டது. 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட இந்திய பிரபலங்கள் பங்கேற்றனர்.
கமல்ஹாசன், பா. ரஞ்சித், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 16ம் தேதியான இன்று தொடங்கி வரும் மே 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
கேன்ஸ் விருது விழாவில் என்ன சிறப்பு?: ஆஸ்கர் விருது விழாவுக்கு பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விருது விழா என்றால் அது கேன்ஸ் திரைப்பட விழா தான். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விருது விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும் பனை ஓலை விருது (பாம் டி ஓர் – palme d’or) விருது தான் ஹைலைட் என்கின்றனர்.
இந்த ஆண்டும் இந்தியா சார்பாக ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவராக இருந்த தீபிகா படுகோன்: கடந்த ஆண்டு இந்தியா 75வது கேன்ஸ் திரைப்பட விழாவை முன்னிட்டு இந்திய அரசை பிரான்ஸ் நாட்டு அரசு கவுரப்படுத்தியது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விருது விழாவுக்கு தேர்வாகும் படங்களுக்கு மார்க் போடும் இடத்திலேயே நடுவராக கவுரவிக்கப்பட்டார்.
கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் ஒவ்வொரு நாளும் வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார்.
கமல் முதல் தமன்னா வரை: பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தென்னிந்திய பிரபலங்கள் பலரும் கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பங்கேற்ற நிலையில், தென்னிந்தியாவில் இருந்து நடிகர் கமல்ஹாசன், மாதவன், இயக்குநர் பா. ரஞ்சித், நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு இஷா குப்தா: இந்நிலையில், 76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று தொடங்கி உள்ள நிலையில், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை இஷா குப்தா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இந்தியா சார்பாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரிப்பது தனக்கு கிடைத்த பெருமை எனக் கூறியுள்ளார் இஷா குப்தா.
சன்னி லியோன் படம் திரையிடல்: இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவாகி உள்ள சன்னி லியோனின் கென்னடி திரைப்படம் மிட் நைட் ஸ்க்ரீனிங்காக இந்த வாரம் திரையிடப்பட உள்ளது.
அதன் திரையிடலுக்காக இயக்குநர் அனுராக் கஷ்யப், நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 35 ஆயிரம் பேர் இந்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பர் எனக் கூறப்படுகிறது.