பீஜிங், சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதை அடுத்து, திருமணத்தின் முக்கியத்துவம், குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் மற்றும் குழந்தை வளர்ப்பின் மகத்துவம் குறித்து, பெண்கள் மத்தியில் அந்நாட்டு அரசு புதிய பிரசாரத்தை துவங்கியுள்ளது.
நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இருந்தது. எனவே, ஒரு தம்பதிக்கு; ஒரு குழந்தை என்ற கொள்கையை, 1980 முதல் 2015 வரை நடைமுறைப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில் சீன மக்கள் தொகை ஆண்டுக்கு சராசரியாக 1.1 சதவீத சரிவை சந்திக்கத் துவங்கியது.
கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக, சீன மக்கள் தொகை 2022ல் கடுமையாக சரிந்தது.
உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, சமீபத்தில் சீனாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.
மக்கள் தொகை சரியத் துவங்கியது, சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மக்கள் தொகை உயர்வை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்த துவங்கியது.
உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள், திருமணம் செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தன.
அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு வரிச் சலுகை, வீடு கட்ட மானியம், மூன்றாவது குழந்தைக்கு சிறப்பு மானியம் உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்தது.
சீன கல்லுாரிகள் கடந்த மாதம் 1 முதல் 7 வரை, மாணவர்கள் காதலிப்பதற்காக சிறப்பு விடுமுறை அளித்தது.
இந்நிலையில் திருமணம், மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமான பல்வேறு திட்டங்களை சீன அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது குறித்து பெண்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது.
இதில், திருமணத்தின் முக்கியத்துவம், சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் பகிர்ந்து கொள்வது, திருமணத்துக்கான வரதட்சணை தொகையை குறைப்பது உள்ளிட்டவை குறித்து தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது.
ஏற்கனவே பீஜிங் உட்பட 20 நகரங்களில் இந்த பிரசாரம் துவங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல்வேறு நகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்