மக்களுக்கு விருப்பமான பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் பயணத்தை தான் மக்கள் விரும்புகின்றனர்.மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக, தனியார் பங்களிப்போடு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்துகிறது.
ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் இல்லாததால், அவசரத்துக்குக் கூட மருந்து, மாத்திரைகள் பெற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மருந்தகங்களை அமைக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்துவலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடிய அவசரக் கால மருத்துவ உதவி மையங்களை அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு திடீரென காயம், சுளுக்கு, மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், ஏற்கெனவே இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் காலம் முடிந்துள்ளது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடியஅவசரக் கால மருத்துவ உதவி மையங்களை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். இவற்றை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளோம் என கூறினார்.