பாட்னா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் கொண்ட பிரம்மாண்ட மாநாட்டை பீகாரில் கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது.
வரும் 2024 ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் இதனை வலியுறுத்தி பேசினார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் பாஜக கூட்டணியில் இருந்து தான் வெளியேறிய பிறகு இதற்கான முயற்சிகளில் இறங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் பாஜகவை வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை பெற்று இருப்பது அக்கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் ஊக்கம் கொடுத்து உள்ளது.
இந்த நிலையில்தான் அடுத்த மாதம் பீகாரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் மகாத்பந்தன் கூட்டணி முடிவு செய்து இருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட திட்டமிட்டப்பட்டு உள்ளது.
அதே நேரம் தேதி முடிவு செய்யப்படவில்லை என்றும், அடுத்த மாதம் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பாட்னாவில் நடைபெற இருக்கும் கூட்டம் நிதீஷ் குமாரின் முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பீகார் முன்னாள் முதலமைச்சரும், இந்துஸ்தானா ஆவாம் மோர்ச்சா நிறுவனருமான ஜிதன் ராம் மஞ்சி, நிதீஷ் குமாரின் இந்த முயற்சி, ஜெயபிரகாஷ் நாராயணனின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு பாராட்டி இருந்தார்.
இதற்கு முன் நிதீஷ் குமார், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினார்.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரை சந்தித்து பேசி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி (AIUDD) தலைவர் பத்ருதீன் அஜ்மலையும் சந்தித்து பேசி உள்ளார் நிதீஷ் குமார். இந்த கூட்டணி தொடர்பாக நிதீஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் தலைவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரின் பெயர்களும் உள்ளன.