சென்னை:
தமிழகம் முழுவதும் இனி வாகன ஓட்டிகளை கண்காணிக்க நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சாலையில் நம்மை யார் கவனிக்க போகிறார்கள் என நினைத்துக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறினால் அவ்வளவுதான். என்னதான் நடக்கப் போகிறது? பார்க்கலாம்.
நாட்டில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அண்மையில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போக்குவரத்து விதிகளை மீறினால் முன்பு இருந்ததை விட 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட், சீ்ட பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் என அபராதம் பல மடங்கு உயர்த்தப்ட்டுள்ளது.
தமிழக அரசு ‘செக்’:
இதன் காரணமாக, போக்குவரத்து விதிமீறல்களும், விபத்துகளும் கணிசமாக குறைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் விதிகளை மீறுவது தொடர் கதையாகவே இருந்தது. இந்நிலையில்தான், அதற்கும் தமிழக அரசு தற்போது செக் வைத்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இந்த புதிய நடைமுறைகளை தமிழக அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதிநவீன கேமராக்கள்:
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இப்போது பல சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையே அவற்றால் தெளிவாக படம்பிடிக்க முடிகிறது. அதேபோல, வாகன ஓட்டிகளின் முகமும் சில நேரங்களில் தெளிவாக தெரிவதில்லை. இதனால் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரையும் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
பிரத்யேக கட்டுப்பாட்டு அறை:
ஆனால், தற்போது அமைக்கப்படும் கேமராக்கள் அப்படி அல்ல. சில கி.மீ. தூரம் வரை கூட ஒரு கேமராவால் தெள்ளத்தெளிவாகவும், துல்லியமாகவும் படம் பிடிக்க முடியும். இதனால் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் உடனடியாக அடையாளம் காணப்படுவார்கள். இதற்காகவே, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளன. அங்கு ஷிப்ட் முறையில் அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவார்கள்.
15 நாட்களுக்குள்.. :
சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, சிக்னல்களை மீறுவது, ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவது, பிற வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்வது, பிறரை அச்சுறுத்தும் வகையில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களை கண்காணித்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக அபராதம் விதிக்கப்படும்.
பாயும் ஆக்சன்:
தேதி, நேரம், இடம் ஆகியற்றுடன் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுந்தகவல் வாயிலாகவோ அல்லது நேரிலோ அபராதச் சீட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும். இதை பெற்றுக்கொண்டு ஆன்லைன் அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சென்று அபராதம் செலுத்திக் கொள்ளலாம். அபராதம் கட்ட தவறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.