கீவ்: உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா நடத்திய வழக்கத்துக்கு மாறான வான்வழித் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “கீவ் பகுதியில் ரஷ்யா வழக்கத்துக்கு மாறான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. மிகக் குறுகிய நேரத்தில் வெவ்வேறு திசைகளிலிருந்து அடுத்தடுத்து ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலில் சுமார் 18 ரஷ்ய ஏவுகணைகளை உக்ரைன் முறியடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
கிவ் நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, ரஷ்யாவின் தாக்குதலில் 3 பேர் காயமடைந்ததாகவும், நகரத்தில் ஒரு பெரிய கட்டிடம் சேதமடைந்ததாகவும் கூறினார்.
முன்னதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன்படி, ஜெலன்ஸ்கி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று உக்ரைனுக்கு ஆதரவாக ஆதரவு திரட்டினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ஞாயிற்றுக்கிழமை ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்த்துப் போரிட தேவையான ராணுவ மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக பிரான்ஸ் உறுதி அளித்தது.
இந்த ஆண்டு உக்ரைனின் 2,000 ராணுவ வீரர்களுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்க இருப்பதாகவும், 4,000 பேர் போலந்தில் பயிற்சி பெற இருக்கிறார்கள் என்றும் பிரான்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜெர்மனி 17 பில்லியன் யூரோக்களை உக்ரைனுக்கு உதவியாகக் கொடுத்துள்ளது என்றும், எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஜெர்மனி அதிபர் ஸ்கோல்ஸ், ஜெலன்ஸிக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் கீவ் பகுதியில் தீவிர வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.