பூனா: கர்நாடகாவைப் போல மகாராஷ்டிராவிலும் வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று அம்மாநில துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலில் தென்மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அம்மாநில துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸ் கூறியதாவது: “நாம் கர்நாடகாவில் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், நமது வாக்கு சதவீதம் குறையவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 28 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
காங்கிரஸின் வெற்றியை தேசியவாத காங்கிரஸும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) ஏன் கொண்டாடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களால் அதை மட்டும்தான் செய்யமுடியும். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற அவர்களின் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. மறுபடியும் பாஜக – சிவசேனா கூட்டணியே வெற்றி பெறும்” என்றார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் வைத்து மகா விகாஸ் அகாடி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், நானா பட்டோல், அஜித் பவார், பாலாசகேப் தோரட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத கட்சியைச் சேர்ந்த நானா பட்டோல், “கர்நாடகா மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இருப்பதைக் காட்டுகிறது. மகாராஷ்டிராவிலும் ஒரு ஊழல் அரசு ஆட்சியில் உள்ளது. வரும் தேர்தலில் மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி வெற்றி பெரும்” என்றார்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் காங்கிரஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. மேலும் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து பாஜகவைத் தோற்கடிப்பதற்காக வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை கூறுகையில், “குறிப்பிட்ட மாநிலங்களில் பலத்துடன் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். கர்நாடகாவில் நாங்கள் காங்கிரஸை ஆதரித்தது போல, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் எங்களுடன் மோதாமல் இருக்க வேண்டும். மக்கள் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. இதற்கு மல்யுத்த வீரர்கள் கூட தப்பவில்லை, இந்தச் சூழ்நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் பலத்துடன் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேற்கு வங்கத்தில் நாங்கள் போராடுகிறோம். டெல்லியில் ஆம் ஆத்மி போராட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.