அஹமதாபாத்: ஐபிலில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி, குஜராத்தில் தனக்கு பிடித்த உணவு கிடைக்காது என்று தெரிவித்து இருக்கிறார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆண்டை போலவே சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய ஷமி, பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து இந்திய அணி முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எழுப்பிய கேள்விகளுக்கு முஹம்மது ஷமி பதிலளித்தார். அப்போது முஹம்மது ஷமியின் உடல் பிட்னஸ் பற்றியும், அதை பராமரிக்க மேற்கொள்ளும் உணவு முறை குறித்தும் ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ஷமி அளித்த பதில்தான் ஹைலைட்.
“நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை உண்பீர்கள்? ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. நீங்கள் எப்படி இந்த அளவுக்கு வலிமையோடு இருக்கிறீர்கள். இந்த கோடை காலத்தில் எப்படி உங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது? வெப்பம் அதிகரித்துக்கொண்டே வரும் அதே நேரம் நீங்கள் வீசும் பந்தின் வேகமும் கூடிக்கொண்டே இருக்கிறது.” என்று ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த முஹம்மது ஷமி, “நான் இப்போது குஜராத்தில் இருக்கிறேன். இங்கு எனக்கான உணவு என்பது கிடைக்காது. ஆனால், இருப்பினும் குஜராத்தி உணவை ரசித்து வருகிறேன்.” என்று கூறினார். இதனை கேட்ட ரவி சாஸ்திரியும் சிரித்துவிட்டார். தொடர்ந்து பேசிய முஹம்மது ஷமி தன்னுடைய பந்துவீசும் முறை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
“நான் என்னுடைய பலத்தின் மீது கவனம் செலுத்துவேன். நல்ல இடங்களில் பந்து வீச முயல்கிறேன். டெல்லிக்கு எதிரான போட்டியில் பந்து நல்ல முறையில் சென்றது. மோகித் ஷர்மாவை போன்ற நல்ல பந்துவீச்சாளர் நடு ஓவர்களில் பல்வேறு விதமாக பந்துவீசுவதும் சிறப்பாக இருக்கிறது.” என்றார்.