சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் பொன்முடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் அடுத்துள்ள மரக்காணம் எக்கியார்குப்பம் என்ற பகுதியில் 13ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது.
அங்கே அமரன் என்ற நபரிடம் இருந்து 50க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார். அதை வாங்கிக் குடித்த கொஞ்ச நாட்களிலேயே வரிசையாக அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கள்ளச்சாராயம்: இதையடுத்து அவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, ஜிப்மர், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், 13 பேர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் இன்னும் அங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் வாங்கி அருந்தியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தைத் தடுக்க அரசு தவறியதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 12 பேரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர்.
நிவாரணம் ஏசி: அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி: “தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அளிக்கிறது. ஆனால், எதிர்க் கட்சிக்காரர்கள் குடித்துவிட்டு உயிரிழந்தோருக்கு எதற்கு ன் 10 லட்சம் ரூபாய் தருகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்.. இந்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்காக இல்லை. உயிரிழந்தோரின் குடும்பம் ஏழ்மை குடும்பங்களாக இருக்கிறது.
மீனவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாகவே உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகை அரசியலாக்க வேண்டும் என்று முதல்வர் எண்ணவில்லை. எங்கள் எண்ணம் இது இல்லை.
வரும் காலத்தில் கள்ளச் சாராய விற்பனையே நடக்கக் கூடாது என்பதே தமிழக முதல்வரின் நோக்கம்.. அதை மனதில் வைத்தே முதல்வர் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்: என்று அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு: முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து எந்த பிரச்சினைக்கு எந்தளவுக்கு நிதி வழங்க வேண்டும் என்பதில் விதிகள் இருக்கிறது. அதன்படியே நிவாரணங்களை அரசு அளிக்க வேண்டும் என்ற போதிலும், குறிப்பிட்ட நிகழ்வுகளில் அதிக நிதி உதவி அளிப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம். அதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவே கூறப்படுகிறது.
அதேநேரம் கள்ளச்சாராயம் காரணமாக ஏற்பட்ட இந்த மரணங்களை எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது முழுக்க முழுக்க தமிழக அரசு, போலீசாரின் தோல்வி என்றே எதிர்க்கட்சியினர் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.