பெங்களூர்:
தன்னை தோற்கடித்த ஹாசன் தொகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தாங்கள் யார் என விரைவில் காட்டுவோம் என கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரீத்தம் கவுடா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை குறிப்பிட்டுத்தான் பிரீத்தம் கவுடா இவ்வாறு பேசியதாக பிற கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் வெறும் 66 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
அதே சமயத்தில், காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருக்கட்சியாக ஆட்சி அரியணையில் அமரவுள்ளது. பாஜகவின் இந்த மோசமான தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
வட மாநிலங்களில் செய்வதை போல தீவிர இந்துத்துவா அரசியலை கையில் எடுத்தது, வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தாதது, ஊழல் குற்றச்சாட்டுகள், ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களே பாஜகவின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, கர்நாடகாவின் ஹாசன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரீத்தம் கவுடா தோல்வி அடைந்தார். ஏற்கனவே அத்தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பிரீத்தம் கவுடா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஜத கட்சி வேட்பாளர் ஸ்வரூப் பிரகாஷ் என்பவரிடம் 7,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், பிரீத்தம் கவுடாவின் வீடியோ ஒன்று இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் தனது சகாக்களிடம் பேசும் அவர், “ஒரே ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களே என்னை தோற்கடித்து இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று நமக்கு காட்டி விட்டார்கள். இனி நாம் யார் என்று அவர்களுக்கு காட்டுவோம். சூரியன், நிலவை போலவே உண்மையும் என்றும் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும். அனைத்து சமூக மக்களையும் நான் ஒரே மாதிரியாகவே கருதினேன். ஆனால், ஒரு சமூகத்தினர் என்னை வெறுத்து இருக்கிறார்கள். இனி அந்த மக்களை அவர்களின் கடவுள் காப்பாற்றட்டும்” எனக் கூறுகிறார்.
ப்ரீத்தம் கவுடாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.