தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல் முறை.. இதுவரை இல்லாத வெயில் அளவு.. அரக்கோணத்தில் 115 டிகிரி

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வரும் நிலையில், தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிக அதிகபட்ச வெப்பநிலையாக இன்று அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் அனல் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் வெளியில் செல்வதற்கே யோசிக்கின்றனர். மோக்கா புயல் காரணமாக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டி பதிவானது. இதனால் மக்கள் சிரமமடைந்தனர். சென்னை நகரம் அனல் பூமியாக மாறியது. சென்னை நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் வெயில் 100 சதவீதத்தை தாண்டி கொளுத்தியது.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அரக்கோணத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக 115 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ஏற்கனவே அறிவித்தபடி மோக்கா புயல் கரையை கடக்கும் போது வங்கக்கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தினை புயல் உறிஞ்சி இருப்பதால் இந்தியாவின் தரைப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. ஈரப்பதம் குறைந்து வெப்ப அலை வீசியது. இதன் காரணமாக வெயிலின் அளவு படிப்படியாக 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதியம் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 115 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சென்னையில் 108 டிகிரியும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 111 டிகிரியும், திண்டுக்கல் மற்றும் குடியாத்தத்தில் 109 டிகிரியும், ஆவடியில் 108 டிகிரியும், நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூரில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.