மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக என்சிபி அதிகாரி சமீர் வான்கடே உட்பட 4 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சில வாரங்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை விடுவிக்க அப்போது என்சிபி அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே ரூ.25 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள், சமீர் வான்கடே மீது லஞ்ச ஊழல் வழக்கைப் பதிவு செய்தனர். சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் கிடைத்திருக்கும் தகவலின்படி, கே.பி.கோசாவி என்பவர் சமீர் வான்கடே சார்பாக நடிகர் ஷாருக் கானை மிரட்டி ரூ.25 கோடியை லஞ்சமாக வாங்க முயன்றதாகத் தெரியவந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் என்சிபி அதிகாரிகள் சமீர் வான்கடே, ஆசிஷ் ரஞ்சன், கே.பி.கோசாவி, சான்வில் டி சவுசா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் ஷாருக் கான் தரப்பிலிருந்து ரூ.18 கோடியை சமீர் வான்கடே உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்றதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை கோசாவியும், சான்வில் டி சவுசாவும் எடுத்துக் கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் கைது விவகாரத்தைத் தொடர்ந்து சமீர் வான்கடே, சென்னையிலுள்ள வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.