டாடா மோட்டார், டாடா ஸ்டீல் என பல நிறுவனங்கள் தெரியும். ஆனால், டாடா ஆயில் மில்ஸ் என்கிற நிறுவனம் பற்றி தெரியுமா? இந்த நிறுவனத்தை டாடா குழுமமே ஒருவரை நம்பி ஏமார்ந்து போய்த் தொடங்கினார்கள் என்றால் நம்புவீர்களா..? வாருங்கள், சுவாரஸ்யமான வரலாற்றைப் பார்ப்போம்.
சமையல் எண்ணெய் தயாரிப்பு
1910 காலகட்டத்தில் டாடா நிறுவனம் தன்னுடைய கிளைகளை அதிவேகமாக பரப்ப எத்தனித்துக் கொண்டிருந்தது. அப்படி டாடா குழுமம் விரும்பிய ஒரு முக்கியமான தொழில் சமையல் எண்ணெய் தயாரிப்பு. இந்தியாவில் தேங்காய் விளைச்சல் அதிகம். ஆனால், நம் நாட்டிற்குத் தேவையான சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லையே… என்பதுதான் டாடா குழுமத்தின் ஆதங்கமாக இருந்தது.
சமையல் எண்ணெய் வியாபாரத்தில் குதிக்க வேண்டும் என்பதே டாடா தரப்பு வாதமாக இருந்தது. இதற்கான நல்லதொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் எனக் காத்திருந்தபோது, எட்வர்ட் தாம்சன் என்கிற சமையல் எண்ணெய் உற்பத்தித் துறை ஆலோசகர் டாடா குழுமத்துக்கு அறிமுகமானார்.
உருவானது டாம்கோ…
அமெரிக்காவில் தேங்காய் எண்ணெய்க்கு நல்ல டிமாண்ட்; அமெரிக்கர்களுக்கு இந்த வியாபாரம் பிடிக்கும். இதில் நல்ல மார்ஜின் உண்டு… என்று அவர் கொடுத்த நம்பிக்கையில் டாடா குழுமம் தேங்காய் எண்ணெய் தயாரிக்க களத்தில் இறங்கியது. 1917-ஆம் ஆண்டு டாடா ஆயில் மில்ஸ் & கோ (சுருக்கமாக, டாம்கோ) என்கிற பெயரில் தன் வேலையைத் தொடங்கியது. எட்வர்ட் தாம்சன், அந்த நிறுவனத்தின் ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டார்.
டாம்கோ தேங்காய் எண்ணெயை ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஆனால், அதை அமெரிக்கா வாங்கத் தயாராக இல்லை. அவ்வளவு ஏன், இந்தியத் தேங்காய்களைக்கூட அமெரிக்கா வாங்கத் தயாராக இல்லை. காரணம், 1920-களின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் நாடு அமெரிக்காவின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. அந்த நாட்டில் மிகப் பெரிய அளவில் தேங்காய் சாகுபடி செய்ய அமெரிக்கா முதலீடு செய்திருந்தது. அப்படி இருக்க, அது ஏன் இந்தியாவிடம் இருந்து தேங்காயை வாங்கப் போகிறது?
ஒரு மாதிரி சமாளித்து அமெரிக்காவுக்குத் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஆர்டர் வாங்கினால், அமெரிக்கா அதற்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதித்தது.
இந்த உண்மையை எட்வர்ட் தாம்சன் டாடா குழுமத்திடம் சொல்லாமல் மறைத்திருந்தார். அத்துடன், நிறுவனத்தின் நிர்வாகத்திலும் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். முதல் வேலையாக, டாடா குழுமம் அவருடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பியது. சுருக்கமாக, டாடா குழுமம் தேங்காய் எண்ணெய் வியாபாரத்தில் தாம்சனை நம்பி வழுக்கிவிழுந்துவிட்டது.
கோகோஜெம் ஆரம்பம்…
இதற்காக நிறுவனத்தை மூடும் முடிவை டாடா எடுக்கத் தயாராக இல்லை. நிறுவனத்தைத் தொடங்கிவிட்டோம், தேங்காய்களும் கிடைக்கின்றன. தேங்காய் எண்ணெயும் உற்பத்தி செய்ய முடியும்… இப்போது சந்தை மட்டும்தான் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு விடை தேடியது. கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, அவர்கள் தேடிய பதில், காலடியிலேயே இருந்தது. கேரளாவிலேயே சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு நல்ல தேவை இருந்தது. தேங்காய் எண்ணெய் தயாரித்தால், கேரளாவிலேயே விற்று லாபம் பார்த்துவிடலாமே!
ஆனால் இரண்டு பிரச்னைகள் சந்தையில் இருந்தன. சமையல் தேங்காய் எண்ணெயின் விலை அடிக்கடி மாறும். அதன் தரமும் அப்படித்தான். ஆக, அதை சரிசெய்து சந்தையைப் பிடிக்க தீர்மானித்தது டாம்கோ. கோகோஜெம் (Cocogem) என்கிற பெயரில் தன் தேங்காய் எண்ணெயை கேரள சேட்டன், சேச்சிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சட்டென மலையாளிகள் கோகோஜெம்மோடு ஒட்டிக்கொண்டனர்.
ஹமாம் குளியல் சோப்
தேங்காய் எண்ணெய் வியாபாரத்தை நிலைப்படுத்தியபிறகு, டாடா குழுமம் இந்தியர்கள் பயன்படுத்த ஒரு சாமானிய குளியல் சோப்பை அறிமுகப்படுத்த விரும்பியது. 1879-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் ஒரு குளியல் சோப் தயாரிக்கப்பட்டாலும், அது மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஹமாம் என்கிற பெயரில் கணிசமாக இயற்கைப் பொருள்களை வைத்து ஒரு சோப்பை அறிமுகப்படுத்தியது டாம்கோ. அதன் பிறகு ஹமாம் கண்ட வளர்ச்சி மறக்க முடியாத வரலாறு.
1895 வாக்கில் ‘சன் லைட்’ என்கிற துணி சோப் ‘Made in England by lever brothers’ என்கிற டேக் லைனுடன் இந்தியாவில் களமிறங்கியது. அதை எதிர்கொள்ள டாம்கோ நிறுவனம் 501 என்கிற துணி சோப்பை கொண்டுவந்தது. மோதி (Moti) என்கிற விசேஷ தினங்களில் குளிக்கப் பயன்படுத்தும் வாசனை சோப்பையும் டாம்கோ தயாரித்து சந்தையை ஒரு கலக்கு கலக்கியது.
அதென்ன 501?
1910 வாக்கில், இந்தியாவில் சுதேசி இயக்கங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி இருந்தன. லீவர் சகோதரர்களின் பொருள்கள் மற்றும் பெயர்கள் பிரிட்டன் மற்றும் டச்சு நாட்டைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
தங்கள் சோப்பின் பெயர் பிரிட்டனோடு தொடர்புடையது போல் இருக்கக் கூடாதென்று டாடா குழுமம் கருதியது. அப்போது 500 என்கிற பெயரில் ஒரு பிரான்ஸ் நாட்டு சோப்பு பிராண்டு இருந்தது. அவர்கள் லீவர் நிறுவனத்தின் முரட்டுப் போட்டியாளராக இருந்தார்கள். அந்த பெயரைத் தொடர்ந்து, டாடா குழுமம் தன் துணி சோப்புக்கு 501 எனப் பெயரிட்டது.
இப்படி பல பிராண்டுகளை வெற்றிகரமாக மக்கள் மனதில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தித் தந்த டாம்கோ நிறுவனம், கடைசியில் 1984-ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் லீவர் (இன்று யுனிலிவர்) நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.