அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பததற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளின் பிரிவு 14 இன் படி, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தான் விரும்பிய இடத்தில் நடமாடுவதற்கும், அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்குமான உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுக்கும் வகையில் எத்தரப்பினரேனும் செயற்படுமிடத்து, அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்புப் பிரிவிற்கும், ஏனைய பிரிவினருக்கும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட போர்கள், கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றினால் சர்வதேசப் பிம்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, ஆனால் ஒரு வருடத்திற்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை அமைதியான, வன்முறையற்ற, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாடாக மாற்றியமைத்துள்ள அதேவேளையில் அரசியலமைப்பைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் மீண்டும் வன்முறையை பரப்பி காட்சிப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், சமீபகால வரலாற்றில், இனக்கலவரத்தை உருவாக்கவும், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்களை உருவாக்கவும், மீண்டும் வன்முறையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சமூக ஊடகங்கள் மூலம் பிறர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக பல்வேறு குழுக்கள் ஊக்குவிப்புகளை வழங்குவதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்; அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்தார் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.