செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து (16.05.2023 – 11 pm) தற்போது வரை 22 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருவதற்கு தலா ரூ.50000 நிதி உதவியும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஒருவருக்கும் தமிழக அரசு ரூ.50000 நிதி உதவி வழங்கிய கூத்தும் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயத்தால் 22 பேர் பலியாகி உள்ள இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கள்ளச்சாராய மரண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருவதாக, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லாவும் விமர்சித்துள்ளார்.
மேலும், இதற்கெல்லாம் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி பலநூறு முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.