மலையக பகுதிகளில் உள்ள 3ஆம் வகை (TYPE 3) ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.
தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (15) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு இவ்வரிசி கையளிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இதற்கமைய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக, அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ வழங்கிய அரிசி நேற்று (15) மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட 3ஆம் வகை (TYPE 3) ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது முகநூல் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.