சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 1992 பேட்ச் அதிகாரிகளாக ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய 4 அதிகாரிகள் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு டாப் லெவல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இன்று 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். விரைவி ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளனர். பல பிரிவுகளின் டாப் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள் என்று பலர் மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவு இந்த வார இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பணியாற்றும் ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகியோர் டி.ஜி.பி. பதவி உயர்வு பெறும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதனால் இவர்கள் விரைவில் டி.ஜி.பி.க்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டிஜிபியாக பதவி உயர்வு பெற இருக்கும் இவர்கள் அனைவரும் 1992-ம் ஆண்டில் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள்.
டி.ஜி.பி. பதவி உயர்வு பட்டியலில் உள்ள ராஜீவ்குமார் டெல்லியில் உள்ள மத்திய அரசு பணியில் உள்ளார். சந்தீப்ராய் ரத்தோர் ஆவடி காவல் ஆணையராக பணியாற்றுகிறார். அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக உள்ளார். வன்னிய பெருமாள் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.