மூணாறு:கேரளமாநிலம் மூணாறில் 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘மூணாறு மேளா’ எனும் சுற்றுலா விழா நேற்று துவங்கியது.
மூணாறுக்கு கோடை சீசனில் வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் ‘மூணாறு மேளா’ விழா நடத்தப்பட்டது. இறுதியாக 2012ல் நடந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் தடைபட்டது. 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தாண்டு சுற்றுலா விழா அரசு, தனியார் பங்களிப்புடன் நேற்று துவங்கியது.
பழைய மூணாறில் கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் நடக்கும் விழாவை கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் துவக்கி வைத்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா, ஊராட்சி தலைவர்கள் பிரவீணா (மூணாறு), கவிதாகுமார்(தேவிகுளம்), தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆனந்தராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக மூணாறு நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்டில் துவங்கிய கலாசார ஊர்வலத்தை எம்.எல்.ஏ.ராஜா துவக்கி வைத்தார். விழா மைதானத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது. தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இவ்விழா மே 28ல் நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement