சென்னை: நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
ஒரு டிடிவியும் ஒரு ஓபிஎஸ்சும் இணைந்ததற்கே இப்படி பதறுகிறார்கள். பழனிசாமிக்கு நான் சொல்வது எல்லாம் நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு துரோகம் செய்தவர்களை வீழ்த்தாமல் நானும் ஓபிஎஸ்சும் ஓய மாட்டோம்.
பண மூட்டையோடு திரிபவர்களை அதிமுகவை தொண்டர்களின் கையில் ஒப்படைப்போம். அதிமுக ஒரு சில சுயநலவாதிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை மீட்டெடுக்கிற பொறுப்பு என்னிடமும் ஓ பன்னீர் செல்வத்திடமும் தொண்டர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் நிச்சயம் உறுதியாக நிறைவேற்றி காட்டுவோம்.
திமுக ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் செய்யாமல் ஏமாற்றி விட்டது. 60 மாதங்களில் வர வேண்டிய கெட்ட பெயரை 24 மாதங்களில் பெற்றுவிட்டது. அதே நேரத்தில் 4 ஆண்டுகள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி செய்த துரோக ஆட்சியால் தமிழக மக்கள் வெகுண்டெழுந்து திமுக கையில் ஆட்சியை கொடுத்தார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையில் 22 பேர் குருவியை போல சுட்டுக்கொல்லப்பட்ட போது எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியிருந்தால் முதல்வரை பார்த்து கேட்கும் அருகதை அவருக்கு இருந்து இருக்கும். தமிழக அரசாங்கத்தின் காவல்துறையின் மெத்தன போக்கால் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழ்நாட்டில் நடக்காமல், போதை கலாசாரத்தை ஆட்சியாளர்கள் தடுத்த நிறுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாகவும் எங்களின் கோரிக்கையாகவும் உள்ளது. பணபலத்தால் நிர்வாகிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஓ பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு என்ற அடிப்படையில் தான் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் பழனிசாமி தரப்புக்கு கொடுத்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பு வந்தால் அது திரும்ப பெறப்படும் என்பதுதான் உண்மை. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
வட தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்று நீதிமன்றத்தில் நிற்காத ஒரு அரசாணையை நிறைவேற்றினாரோ.. அது போல கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்காக இந்த நிகழ்வுகள் எல்லாம் பயன்படும். ஏனெனில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்புதான் இறுதியாக உறுதி செய்யப்படும் என்பதுதான் எனது நம்பிக்கை. அதன்படி ஓ பன்னீர் செல்வம் தான் இறுதியாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.