டாக்கா, இந்தியா உட்பட ஒரு சில நாடுகளின் துாதர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பாதுகாப்பு திரும்ப பெறப்படுவதாக வங்கதேச அரசு அறிவித்து உள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள உணவகத்தில், முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர் 2016ல் நடத்திய தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர்.
அதில், 17 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்துக்கு பின், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் மற்றும் துாதரக உயர் அதிகாரிகளுக்கு வங்கதேச அரசு கூடுதல் பாதுகாப்பு அளித்தது.
இவர்கள் வெளி இடங்களுக்கு செல்கையில், கலவர கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் கூடிய போலீஸ் படையினர் உடன் செல்வர். அவர்களது வீடுகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த கூடுதல் பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக, வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் தெரிவித்தார்.
இவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பு தொடரும் என்றும் தெரிவித்த அவர், ”பாதுகாப்புக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்ய வேண்டாம்,” என, அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement