புதுடில்லி:’ஜூன் 1 முதல், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களை உடையது. 340 அறைகள் உள்ள இந்த மாளிகையில், 190 ஏக்கர் பரப்பளவில் தோட்டமும் உள்ளது.
இந்நிலையில், ‘வரும் ஜூன் 1 முதல், வாரத்தில் ஆறு நாட்களுக்கு பொது மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
வரும் ஜூன் 1 முதல், அரசு விடுமுறை நாட்கள் தவிர, செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை என, ஏழு கட்டங்களாக ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.
ஜனாதிபதி மாளிகை சுற்றுப்பயணம், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் பிரிவில், ஜனாதிபதி மாளிகையின் பிரதான கட்டடம் மற்றும் அசோக் ஹால், தர்பார் ஹால் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.
இரண்டாம் பிரிவில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் உள்ளது.
மூன்றாம் பிரிவில், புகழ் பெற்ற தோட்டங்களான அம்ரித் உத்யன், மூலிகைத் தோட்டம், இசைத் தோட்டம் மற்றும் ஆன்மிகத் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. http://rashtrapatisachivalaya.gov.in/rbtour என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் வருகைக்கான முன்பதிவை ‘ஆன்லைனில்’ பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement