கள்ளச்சாராயத்தால் பலி.. எளிதாக போகக்கூடிய ஒன்றல்ல… கமல்ஹாசன் வலியுறுத்தல்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம், திருவண்ணாமலை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் உள்ளவர்கள் 11 மருத்துவர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள இந்த மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மதுவிலக்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்

கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ் நாட்டை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல என கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம் என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை, கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபோவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.