புதுடெல்லி: மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு விழா மூலமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். இந்தியாவில் தொழில் துறையும், முதலீடும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்துவருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதன்மூலம், மத்திய, மாநில அரசுகளின் கீழ் வரும் துறைகளில் ஆட்களை புதிதாக வேலைக்கு எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலைக்கு எடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பது, தொழில்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது: “கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் பணி நியமன நடைமுறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசுப் பணிகளுக்கான பணிநியமன நடைமுறை சிக்கல் நிறைந்ததாகவும், அதிக காலம் பிடிக்கக்கூடியதாகவும் இருந்தது.
வேலைக்கு விண்ணப்பிப்பது தொடங்கி தேர்வு, நேர்காணல், நியமனம் என பணி நியமன நடைமுறைகளுக்கு 16 மாதங்கள் வரை ஆனது. ஆனால், இப்போது 6 மாதங்களுக்குள் பணிநியமன நடைமுறை முடிந்துவிடுகிறது. ஊழல் ஒழிக்கப்பட்டு, பணி நியமனத்திலும் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அனைத்து கொள்கைகளும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2018-19 முதல் 4.50 கோடிபேர் அமைப்புசார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் ஆவணங்கள் காட்டுகின்றன.
இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2014-க்கு முன்பு கிராமப்புற சாலைகள் 4 லட்சம் கி.மீ.நீளத்துக்கு போடப்பட்டிருந்தன. தற்போது அது 7.25 லட்சம்கி.மீ. என விரிவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, விமான நிலையங்களின் எண்ணிக்கை 7-ல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் தொழில் துறை, அந்நிய நேரடி முதலீடும் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆப்பிள், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளன. அந்நிய நேரடி முதலீடு காரணமாக இந்தியாவின் மூலைமுடுக்குகளில் வேலைவாய்ப்பு உருவாகி வருகிறது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்திய வேலைவாய்ப்பில் பெரும் புரட்சி நிகழ்த்தி வருகின்றன. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவில் சில நூறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. இப்போது 1 லட்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் குறைந்தபட்சம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
கல்வித் துறையை பொருத்தவரை, 2014-க்கு முன்பு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 400-ல் இருந்து 700 ஆக உயர்ந்துள்ளது.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளில் 9 கோடி முதல்தலைமுறை தொழில்முனைவோர் உருவாகி உள்ளனர். புதிய துறைகளின் வளர்ச்சியால் புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.