தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத பாதியில் இருந்து ஆண்டு இறுதித் தேர்வுகள் படிப்படியாக முடிவுக்கு வந்தன. இதையடுத்து 12, 11, 10 மற்றும் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை கோடை விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
இந்த சூழலில் தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே பாட நூல்கள், நோட்டுகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதையொட்டி மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் விநியோகம்
இதன்மூலம் ஜூன் 1 மற்றும் ஜூன் 5ஆம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அன்றைய தினமே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர மாணவர்களுக்கான சீருடைகள், புத்தகப்பை, காலணி, வண்ணப் பென்சில்கள், ஜாமென்ட்ரி பெட்டி உள்ளிட்டவையும் போதிய அளவில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
இதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தேவைப்படும் பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அதற்கேற்ப நடவடிக்கைகள் முடுக்கி விடப்படவுள்ளது. முன்னதாக ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 5 கோடியே 16 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பு
இவை சென்னையில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவை கல்வித்துறைக்கு சொந்தமான மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்து ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் உரிய விவரங்களை அளித்து பாடப் புத்தகங்களை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மாவட்ட கல்வி அலுவலர் சரியான முறையில் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் இத்தகைய ஏற்பாட்டை மாநில அரசு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் நடந்து முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.