பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னிச்சையாக முடிவு எடுக்குமாறு மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
ஒக்கலிகா சாதி சங்கங்களும், மடாதிபதிகளும், ‘‘காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த டி.கே.சிவகுமாரையே முதல்வராக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். அதேபோல லிங்காயத்து மடாதிபதிகள், ‘‘30க்கும் மேற்பட்ட லிங்காயத்து எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளதால், லிங்காயத்து வகுப்பை சேர்ந்த எம்.பி. பாட்டீலை முதல்வராக்க வேண்டும்” என கோரி யுள்ளனர்.
பட்டியலினத்தை சேர்ந்த மூத்த தலைவர் பரமேஷ்வர், “இப்போது பட்டியலின, பழங்குடியின எம்எல்ஏக்கள் 50 பேர் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மல்லிகார்ஜுன கார்கே நேற்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, ‘‘நீங்கள் (கார்கே) கர்நாடகாவை சேர்ந்த மூத்த தலைவர் என்பதால் அம்மாநில அரசியல் நன்றாக தெரியும். எனவே முதல்வர் விவகாரத்தில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுங்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், ஏழைகள் வாக்களித்ததாலே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும்” என ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று டெல்லி சென்ற டி.கே.சிவகுமார், கார்கேவின் இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார். அப்போது, ‘சித்தராமையாவை ஏன் முதல்வராக்க கூடாது. தனக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்பதனை விவரிக்கும் வகையில் 25 அம்சங்கள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மாலையில் கார்கேவை, சித்தராமையா சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு ஆதரவாக இருக்கும் 90 எம்எல்ஏக்களின் பட்டியலை வழங்கினார்.
முதல்வர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த கார்கே திட்டமிட்டுள்ளார்.