சென்னை: தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக, வேலூரில் நேற்று முன்தினம் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் சென்னை, திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பநிலையும் பதிவானது. இதேநிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 18 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணி, சென்னை நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 107 டிகிரி, கரூர் பரமத்தி, மதுரை விமானநிலையம், பரங்கிபேட்டையில் தலா 105 டிகிரி, கடலூர், ஈரோடு, திருச்சியில் தலா 104 டிகிரி, மதுரை நகரம், நாகப்பட்டினத்தில் தலா 103 டிகிரி, பாளையங்கோட்டை, சேலம், தஞ்சாவூரில் தலா 102, நாமக்கல், திருப்பத்தூரில் தலா 101, தருமபுரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவானது.
இதுபோல, புதுச்சேரி, காரைக் காலில் வெயில் சதம் அடித்தது. அதிக வெயில் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வடமேற்கில் இருந்து தமிழகத்தை நோக்கி வறண்ட தரைக்காற்று வீசுகிறது. மேலும், சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக தமிழக நிலப்பரப்பில் விழுகிறது. கடந்த வாரம், வங்கக்கடலில் உருவான மொக்கா புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும், கடலில் இருந்து வீசக் கூடிய கிழக்கு திசை காற்றும் நின்று விட்டது. கடல் காற்று வீசுவதும் தாமதமாகிறது. இதன்காரணங்களால், வெப்பம் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்மே 17,18 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்வரை அதிகமாக இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது, வெப்பஅழுத்தம் ஏற்படும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.