வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: தன் நிறுவன விமானங்கள் தாமதமானதால், ஜப்பான் விமான நிலையத்தில் தவித்த பயணியரிடம் மன்னிப்பு கேட்க, அதன் நிறுவனர் விமானத்தில் பறந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான தைவானில் ‘ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனம் உள்ளது. இதன் விமானம் ஒன்று சமீபத்தில், மற்றொரு கிழக்காசிய நாடான ஜப்பானில் இருந்து பிற்பகல் 3:45 மணிக்கு புறப்பட இருந்தது. ஆனால் மாலை 4:20 மணி வரை எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், 308 பயணியர் நரிடா விமான நிலையத்தில் தவித்தனர்.
இதையடுத்து அவர்களை மாலை 5:30 மணிக்கு புறப்படும் மற்றொரு விமானத்தில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த விமானத்தின் ஊழியர்கள் வராததால், இரவு 11:00 மணி வரை அதுவும் புறப்படவில்லை.
இந்நிலையில், பயணியருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கூட வழங்கப்படாததால் அவர்கள் கடும் அவதியடைந்தனர். பின், மறுநாள் காலை 6:00 மணிக்கு அதாவது 16 மணி நேரம் தாமதத்துக்கு பின் விமானம் ஜப்பானில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, தன் நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் கிளம்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பயணியர் தவிப்பதை அறிந்த இதன் நிறுவனர் சாங் குயோவே, உடனடியாக ஜப்பானுக்கு விமானத்தில் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
அப்போது அவர்களிடம் பேசிய சாங், ‘புயல் காரணமாக முதல் விமானமும், விமான பராமரிப்பு காரணமாக இரண்டாவது விமானமும் தாமதம் ஆனதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்; பயணக் கட்டணத்தை முழுமையாக திருப்பி தருகிறேன்’ என தெரிவித்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement