சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் ஓ.பி.எஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை புகழ்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஒரத்தநாடு பொதுக்கூட்டத்தில் தன்னைப் பற்றி தவறாக பேசியிருப்பதாக கூறினார்.
தான் ஒரத்தநாட்டிற்கு சட்டக்கல்லூரி கேட்ட போது, 150 கோடி ரூபாய் செலவாகும் என்று வேண்டாம் என மறுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் போட்டுடைத்தார் வைத்திலிங்கம். எடப்பாடி பழனிச்சாமி தான் வகிக்கும் பதவிக்கு கொஞ்சமும் தகுதி இல்லாமல் பேசியிருக்கிறார் என்றும் விளாசியுள்ளார்.
மேலும்
– டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து துரோகியும் துரோகியும் ஒன்று சேர்ந்துவிட்டதாக கூறியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரனை புகழ்ந்து பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார் என்றும் வைத்திலிங்கம் சாடியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சருக்கான மரியாதையை கெடுத்துவிட்டார் என்றும் அவர் நம்பிக்கை துரோகி என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார் வைத்திலிங்கம். மேலும் பொய்யான தகவல்களை கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறிய வைத்திலிங்கம், ஓபிஎஸ் சபரீசன் சந்திப்பு குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி சபரீசனுடன் பல முறை போனில் ரகசியமாக பேசி வருகிறார் என்றும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
யாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் தெரியும் என்றும் கூறிய வைத்திலிங்கம், நிரூபிக்க வேண்டிய நேரத்தில் மக்கள் ஆதரவை நிரூப்பிப்போம் என்றார். இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு தங்களை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன் என்றும் வைத்திலிங்கம் காட்டமாக கூறினார்.