ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயுத்தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (31). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு செந்தமிழ்ச்செல்வன், ராணிப்பேட்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (47), வாழைப்பந்தலை சேர்ந்த ராமதாஸ் (26), புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (49) ஆகியோருடன் தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கி நான்கு பேரும் மயக்கமடைந்த நிலையில் செந்தமிழ் செல்வன் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சடைந்து உடனடியாக ராஜா, ராமதாஸ், மகேந்திரன் ஆகிய மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உயிரிழந்த செந்தமிழ் செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.