கொச்சி, கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டரை கொலை செய்த சுவடு மறைவதற்குள்ளாக, கொச்சி அரசு மருத்துவமனையில் வேறொரு டாக்டரை கடுமையாக தாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் வந்தனா தாசை, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கைதி சந்தீப் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து டாக்டர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க அவசர சட்டம் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துஉள்ளது.
இதன் வாயிலாக டாக்டர்களை தாக்குபவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.
இந்நிலையில், நேற்று இரவு கொச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர் இர்பான் பணியில் இருந்தார்.
அப்போது, வட்டகுன்று பகுதியைச் சேர்ந்த டோயல், 35, என்பவரை விபத்தில் சிக்கியதாக கூறி அவரது உறவினர்கள் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு, டாக்டர் இர்பான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது டோயல் டாக்டரை தாக்கினார். சக ஊழியர்கள் இர்பானை மீட்டதுடன் உடனடியாக டோயலை அப்புறப்படுத்தினர்.
பின், போதையில் இருந்த அவரை மருத்துவக்கல்லுாரி போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், அடுத்தடுத்து டாக்டர்கள் தாக்கப்படுவது, அவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement