செங்கல்பட்டு: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு அரசு நிவாரணம் அறிவித்த நிலையில் கள்ளச்சாராய வழக்கில் அவரே முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு அறிவிக்கப்பட்ட ரூ 50 ஆயிரம் அரசு நிவாரணம் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த 13 ஆம் தேதி முதல் அதிகரித்த வண்ணம் உள்ளன. மதுவிலக்கு கேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரிக்கும் என்பதால் அரசு மது விலக்கை அமல்படுத்துவதில் சுணக்கம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் அரசே ஏற்று நடத்தும் டாஸ்மாக் கடைகள் இருந்து வரும் போதிலும் ஆங்காங்கே கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயத்திற்கு எதிராக வேட்டையில் கைது நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அது போல் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அந்த ரூ 50 ஆயிரம் நிவாரணமானது கள்ளச்சாராயத்தை காய்ச்சிய முக்கிய குற்றவாளிக்கும் வழங்கப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. கள்ளச்சாராயத்தை காய்ச்சுவதில் முக்கிய குற்றவாளியாக இருந்த அமாவாசை அதே கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தகவலில், ‘செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று அரசு வழக்கு பதிவு செய்துள்ள அமாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவரது தம்பி ஆவார். இந்த அமாவாசை தானும் கள்ளச்சாராயத்தை அருந்தியதாக மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.
கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்த அமாவாசைக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை அரசு வழங்கியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும். கள்ளச்சாராயம் காய்ச்சி உயிர்களைப் பறித்தவருக்கு, அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஏன் இந்த உலக்கத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசுதான்! என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக தனது ட்விட்டரில் குற்றவாளிகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட 4 நபர்களில் முதல் பெயராக அமாவாசை இருப்பதையும் அவருக்கு அரசின் நிவாரணத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பட்டியல் நகலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அமாவாசைக்கு அரசு அளித்த நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை கள்ளச்சாராய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.